மெய்யுணர்தல்

மெய்யுணர்தல்


மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்
கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்
பொய் தான் தவிர்ந்து, உன்னை, `போற்றி, சய, சய, போற்றி!' என்னும்
கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.


கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!


உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து உருகி,
மத்த மனத்தொடு, `மால் இவன்' என்ன, மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும்
தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?


சாவ, முன் நாள், தக்கன் வேள்வித் தகர் தின்று, நஞ்சம் அஞ்சி,
`ஆவ! எந்தாய்!' என்று, அவிதா இடும் நம்மவர் அவரே,
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி, விண் ஆண்டு, மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து, என்ன பாவம் திரிதவரே!


தவமே புரிந்திலன்; தண் மலர் இட்டு, முட்டாது இறைஞ்சேன்;
அவமே பிறந்த அரு வினையேன், உனக்கு அன்பர் உள் ஆம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்; நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கு; எம் பரம்பரனே!


பரந்து பல் ஆய் மலர் இட்டு, முட்டாது, அடியே இறைஞ்சி,
`இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும், அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே! நின் தன் வார் கழற்கு அன்பு, எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே.


முழுவதும் கண்டவனைப் படைத்தான், முடி சாய்த்து, முன்நாள்,
செழு மலர் கொண்டு எங்கும் தேட, அப்பாலன்; இப்பால், எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி, கதி இலியாய்,
உழுவையின் தோல் உடுத்து, உன்மத்தம் மேல்கொண்டு, உழிதருமே


உழிதரு காலும், கனலும், புனலொடு, மண்ணும், விண்ணும்,
இழிதரு காலம், எக் காலம் வருவது? வந்ததன் பின்,
உழிதரு கால், அத்த! உன் அடியேன் செய்த வல் வினையைக்
கழிதரு காலமும் ஆய், அவை காத்து, எம்மைக் காப்பவனே!


பவன், எம்பிரான், பனி மா மதிக் கண்ணி, விண்ணோர் பெருமான்,
சிவன், எம்பிரான், என்னை ஆண்டுகொண்டான், என் சிறுமை கண்டும்;
அவன் எம்பிரான் என்ன, நான் அடியேன் என்ன, இப் பரிசே
புவன், எம்பிரான்! தெரியும் பரிசு ஆவது இயம்புகவே


புகவே தகேன் உனக்கு அன்பருள், யான்; என் பொல்லா மணியே!
தகவே, எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை? எப் புன்மையரை
மிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி; அண்ணா! அமுதே!
நகவே தகும் எம்பிரான்! என்னை நீ செய்த நாடகமே.

Comments

Popular posts from this blog

திருப்பொன் சுண்ணம்

அச்சப் பத்து

குழைத்த பத்து